மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா? - கால்குலேட்டரை கையில் எடுத்த ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில் என்ன நிலவரம் என்று பார்ப்போம்.
நடப்பு ஐபிஎல் தொடர் முன்னாள், நடப்பு சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகளுக்கு மிகப்பெரிய சோதனையான ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது.
இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணி கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதம் இருப்பதால் அனைத்திலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் வந்துவிடும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 14 புள்ளிகள் எடுக்க வேண்டும். ஆனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்காக போட்டியிடும் மற்ற அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்க வேண்டும்.
இதில் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி முன்னிலையில் இருந்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே கடைசியாக 2011 ஆம் ஆண்டு 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடியது. இதில் பஞ்சாப் அணி 14 புள்ளிகளை பெற்ற போதும் ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்தை பெற்றதால் ப்ளே ஆஃப்க்கு தகுதிப் பெறவில்லை. இந்த நிலையில் மும்பை அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ப்ளே ஆஃப் செல்லலாம்.