2050ல் மும்பை மாநகர் மூழ்கும்: மாநகராட்சி அதிகாரி அதிர்ச்சி தகவல்

mumbai ClimateChange ClimateActionPlan
By Irumporai Aug 29, 2021 06:31 PM GMT
Report

 கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையின் பெரும்பான்மையான முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அம்மாநில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், காலநிலை செயல் திட்டம் மற்றும் அதன் இணையதளத்தை அம்மாநில சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்தார். அப்போது மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல் பேசுகையில், நகரில் எப்போதும் இல்லாத அளவிற்கு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

நாம் விழிப்புடன் செயல்படாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் ஆபத்தான சூழலை சந்திக்க நேரிடும். அதாவது, வருகின்ற 2050ம் ஆண்டுக்குள் மும்பை நகரின் முக்கிய வணிக தளங்களான நரிமன் பாயிண்ட் மற்றும் மந்திரலாயா உள்ள மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கும் வகையில், மும்பை மாநகரின் செயல் திட்டத்தை தயாரித்துள்ளோம். காலநிலை நிச்சயமற்ற தன்மையால் மிகவும் பாதிக்கக்கூடியப் பகுதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

ஏற்கனவே இயற்கை மாற்றங்கள் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வருகின்ற 2050-ஆம் ஆண்டில் சென்னை‌, மும்பை உள்ளிட்ட ஏழு ந‌கரங்கள் தண்ணீரினுள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது