மீண்டும் சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல் .... பிளே ஆஃப் கனவு நனவாகுமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தொடரை விட்டு வெளியே மும்பை அணியும் சென்றுள்ளது.
லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 7 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இதில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும் நூழிலையிலான வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே முதல் சுற்றில் நடந்த போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற முனைப்பு காட்டும் அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி காத்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் கட்டாய வெற்றி, மற்ற அணிகளின் முடிவும, சாதகமாக அமையும் ரன்ரேட்டிலும் உயரிய நிலையில் இருந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.