முல்லைப்பெரியாறு அணை திறப்பு விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு அறிவிப்பு
முல்லைப்பெரியாறு அணை மதகு தமிழக அதிகாரிகளால் தான் திறக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த அக்.10 ஆம் தேதி அரசின் அனுமதி தொடர்பான செய்திகள் இல்லாமல், அவசர கதியில் நீர் திறந்து விடப்பட்டு வெளியற்றப்பட்டது.
இந்த விஷயம் தமிழக அரசியல்வாதிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணையை திறந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போர்க்கொடி தூக்கியது.
இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பில், "முல்லைப்பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் நீர் திறப்பை மேற்கொள்ளவில்லை.
முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம். அது உண்மைக்கு புறம்பான செய்தி. முல்லைப்பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல பத்திரிகைகளில் தவறான செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு முல்லை பெரியாறு அணையை கண்காணித்து, பராமரித்து, இயக்கி வருகிறது.
அக். 10 ஆம் தேதி தமிழக அதிகாரிகளால் தான் முல்லைப்பெரியாறில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அக்.10 ஆம் தேதி அணை மதகுகளை திறக்க மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்து, அன்றைய தினத்திலேயே அணையை திறந்து நீரினை வெளியேற்றியது.
அணையை திறக்கப்படும் போது கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள் என்பது தான் உண்மை நிலவரம்" என்று தெரிவித்துள்ளார்.