முல்லைப்பெரியாறு குறித்து சர்ச்சைப் பதிவிட்ட பிரித்விராஜ் மீது வழக்கு பாயுமா? கேரளாவில் பரபரப்பு

prithviraj dam mullaiperiyar cmwarns
By Irumporai Oct 27, 2021 12:45 PM GMT
Report

கேரளாவில் அண்மையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில்  உள்ளதால் ,புதிய அணை கட்ட வேண்டும் எனவும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை வலியறுத்தி #decommission mullaperiyar என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் ஆனது .

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரித்விராஜ் உள்ளிட்ட சில மலையாள நடிகர்களும் சமூகவலைதளங்களில் முல்லை பெரியாறு அணையை செயல்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நடிகர் பிருத்விராஜ் அக்டோபர் 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழைமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, எது சரியோ அதைச் செய்யவேண்டிய நேரம் இது” என்ற கருத்தைப் பதிவுசெய்தார்.

இந்தக் கோரிக்கைக்குத் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:

முல்லை பெரியாறு அணை குறித்து தற்போதைக்கு எந்தக் கவலையும் இல்லை. சமூக வலைதளங்களில் ஒரு பிரிவினர், அணை ஆபத்தில் இருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகின்றனர். இதுபோன்ற பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் ,  பல்வேறு பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு நம்முடன் ஒத்துழைத்துவருகிறது. இருப்பினும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாட்டுடன் பேசி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்போம் என கூறியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சொகுசு விடுதிகளையும் பங்களாக்களையும் கட்டிவைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக அணை குறித்து வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள் என்கிற கருத்தும் உண்டு.