அணையை உடைத்தால் எல்லைகளை அடைப்போம் - சீமான் ஆவேசம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்வதற்கு முன்கூட்டியே கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனே,
அணை பலகீனமாகிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும்,
அதனை தடுக்கத் தவறிய தமிழக மற்றும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்,
கேரள அரசு அதில் பிரச்சினை செய்வது தேவையற்றது. அதனை தொடக்கத்திலேயே அம்மாநில முதல்வருடன்,
தமிழக முதல்வர் பேசி, சுமூகமாக நிலவும் இரு மாநில உறவை கெடுக்கும் என கண்டித்திருக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை முன்கூட்டியே அம்மாநில அமைச்சர்கள் அறிவித்தது தமிழகத்திற்கான அவமதிப்பு.
இதனால் நமது உரிமை இழக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் இந்த அத்துமீறலை கண்டிக்க வேண்டிய தமிழக நீர்வளத்துறை அமைச்சரோ மழுப்பலாகத் தான் பதில் அளிக்கிறார்.
அணையின் நீர்மட்டம் 142அடியாக உயர்வதற்கு முன்பாகவே 136அடியாக இருக்கும் போதே, தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு கூட தெரிவிக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதை தமிழக அரசு கண்டித்திருக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் "ரூல் கர்வ்" முறை அமல்படுத்தப்பட்டது என்பது ஒரு கொடுங்கால் ஆட்சி போன்றதாகும்.
தொடர்ந்து இதன் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் எனவும்,
தேவைப்பட்டால் தமிழகத்தில் உள்ள கேரள எல்லைகளை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் அம்மாநிலத்திற்கு நமது எதிர்ப்பை உணர்த்த முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நீராதார பிரச்சினைகளில் நாம் தமிழர் கட்சி எப்போதும் களத்தில் இருக்கும் எனக் கூறினார்.