சென்னைக்கு வரும் டபுள் டக்கர் பஸ் - MTC சொன்ன குட் நியூஸ்
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது.
சென்னை போக்குவரத்து
கல்வி மற்றும் வேலைக்காக சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் போக்குவரத்துகாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் தினமும் லட்சக்கணக்கானோர், அரசு பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து மூலம் பயணம் செய்கின்றனர்.
ஏசி மின்சார பேருந்துகள்
இதில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் உள்ள நிலையில் பேருந்துகளே சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது. இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் 600 ஏசி மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பேருந்துகளில் GPS மூலம் ரூட்-மேப்பிங் செய்வதற்கான ஆன்-பஸ் இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம், தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள், சிசிடிவி கேமராக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகளைக் காட்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டு ஆகியவை இருக்கும்.
இந்த பேருந்துகளுக்கான டெண்டர்கள் ஏற்கனவே விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சில பேருந்து பணிமனைகளில் அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.
டபுள் டக்கர் பேருந்துகள்
மேலும், 20 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் சென்னையில் 'டபுள் டக்கர்' பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகள் வழக்கமான பேருந்துகளை விட அதிக உயரம் மற்றும் அதிக இருக்கைகள் இருந்ததால் 40-50 கிமீ வேகத்திலே இயக்கப்பட்டன.
அதன் பின்னர் மேம்பால கட்டுமானம் போன்ற பணிகளால் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. தற்போது சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்தை இயக்குவதற்கான வழித்தடங்கள் முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடங்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.