“தங்க உண்டியல தகர டப்பானு நெனச்சிட்டிருக்காங்க” - இளம் வீரரை புகழ்ந்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத்
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை தேர்வாளரான எம்.எஸ்.கே.பிரசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இளம் வீரர் முகமது சிராஜை பாராட்டிப் பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் நிலவரம் குறித்தும் வீரர்கள் குறித்தும் இந்திய அணியின் தேர்வு குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத்,
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
‘இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
டெஸ்ட் தொடரின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் சமி ஆகியோருடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இவரைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கவேண்டும்,அப்படி செய்தால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய பலமாக அமையும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இந்த உத்தியைப் பயன்படுத்திருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்,
மேலும் இந்திய அணிக்கு அளவுக்கு மீறி திறமை படைத்த சிராஜ் போன்ற ஒரு இளம் வீரர் இருப்பது மிகவும் நல்லது’ என்று பிரசாத் பாராட்டிப் பேசியுள்ளார்.