NCC மறுசீரமைப்புக் குழுவில் தோனி - மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்
தேசிய மாணவர் படையை(என்சிசி) மறுசீரமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கிய உயர் மட்டக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய மாணவர் படையை காலத்துக்கு ஏற்ப மாற்றவும், நவீனத்துவத்தை புகுத்தவும், முன்னாள் எம்.பி. பைஜெயந்த் பாண்டா தலைமையில் 16 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே, ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தர், முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், நிதிஅமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், முகுல் கனித்கர், மேஜர்ஜெனரல் அலோக் ராஜ், மிலிந்த் காம்ளே, ருதுராஜ் சின்ஹா, வேதிகா பந்தர்கர், ஆனந்த் ஷா, மயங்க் திவாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டமைப்புக்கும், தேசிய வளர்ச்சிக்கும் எந்தவகையில் தேசிய மாணவர் படை, மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இந்த உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2019-ம்ஆண்டில் இந்திய ராணுவத்தின் பாராசூடு பிரிவில் ஒரு மாதத்துக்கும் மேலாக தோனி பயிற்சியில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.