பரபரப்பு நிமிடங்களால் பதற்றம் அடைந்த ரசிகர்கள் - கூலாக விளையாடி வெற்றி வாகை சூடிய தோனி
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியும் - சென்னை அணியும் மோதின இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், ஹெய்ட்மர் 37 ரன்களும், இறுதி வரை போராடிய ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கீங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ராபின் உத்தப்பா – ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன்னும் சேர்த்தது.
ராபின் உத்தப்பா 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் போராடிய ருத்துராஜ் கெய்க்வாட் 70 ரன்கள் எடுத்திருந்த போது 19வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்த தல தோனி அசால்டாக வெறும் 6 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்ததன் மூலம் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
கடைசி நிமிடங்கள் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியால் சென்னை ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். தோனியின் அசத்தல் அடியால் அணி வெற்றி பெற்றது இந்த வெற்றியை அவரது ரசிகர் தீவிரமாக கொண்டாடி வருகின்றனர்.