தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா - சிஎஸ்கே நிர்வாகம்

MS Dhoni CSK MK Stalin Appreciation Ceremony
By Thahir Oct 18, 2021 12:52 PM GMT
Report

டி-20 உலகக் கோப்பை முடிந்து, தோனி சென்னை வந்தவுடன், முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

14 வது ஐபிஎல் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடியது.

இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, ஐ.பி.எல் கோப்பையை நான்காவது முறையாக வென்று அசத்தியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினரும் மற்ற வீரர்களும் இந்தியா திரும்பிய நிலையில், டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டு இருப்பதால், அவர் குடும்பத்துடன் துபாயில் இருக்கிறார்.

இந்தியா திரும்பவில்லை. இதனையடுத்து, ஐபிஎல் கோப்பை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. தியாகராய நகரில் உள்ள வெங்கடலாசலபதி கோயிலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் இந்த கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், இந்தியா சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், தோனி சென்னை வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை, தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை எனவும் சீனிவாசன் கூறினார்.