2019 உலகக்கோப்பை ரன் அவுட்; அன்றே ஓய்வுபெற்றுவிட்டேன் - மனம் திறந்த தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது 2019ம் ஆண்டு உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து பேசியுள்ளார்.
உலகக்கோப்பை 2019
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா.
ஆனால் கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. அதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனவுடன் இந்திய ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அப்போதே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாது என்று இந்திய ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர்.
அதேபோல இந்திய அணி அந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்காமல் இருந்த தோனி, ஓராண்டுகள் கழித்து தனது ஒய்வு முடிவை அறிவித்தார். இது இந்திய ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
மனம் திறந்த தோனி
இந்நிலையில் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது "ஆட்டத்தின் முடிவு மிக நெருக்கமாக இருக்கையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். குறிப்பாக, போட்டியில் தோல்விடையும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம்.
என் மனதுக்குள் நான் கூறிக் கொண்டேன். ஓராண்டுக்குப் பிறகு ஓய்வு முடிவை அறிவித்திருந்தாலும், நாம் ரன் அவுட் ஆன தினமே நான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி தினம். உண்மையில் நான் ரன் அவுட் ஆன தினமே ஓய்வு பெற்றுவிட்டேன். நாட்டில் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது.
எந்த விளையாட்டாக இருந்தாலும் நீங்கள் உங்களது நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். காமன்வெல்த் அல்லது ஒலிம்பிக் அல்லது ஐசிசி போட்டிகளை எடுத்துக் கொண்டாலும் நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம்" என்று தோனி பேசியுள்ளார்.