தோனிக்கு பாடம் கற்பித்த ராஜஸ்தான் வீரர்கள் - சஞ்சு சாம்சன் பெருமிதம்
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும்.
அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், இன்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டமும் இழக்காமல்
60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 189 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் ஓவரில் இருந்தே சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
ஈவின் லீவிஸ் (27), ஜெய்ஸ்வால் (50), சஞ்சு சாம்சன் (28) மற்றும் சிவம் துபே (64* ) என அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்ததன் மூலம் 17.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபேவை பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “தரமான பேட்ஸ்மேன்களை வைத்து கொண்டு பல போட்டிகளில் தோல்வியடைந்தது வேதனையை கொடுத்தது.
பேட்டிங்கில் எங்கள் பலம் என்ன எங்களால் என்ன செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். ஆடுகளம் நான் கணித்தது போன்றே இருந்தது, அதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
எங்கள் அணியின் துவக்க வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டனர். பவர்ப்ளேவிற்குள் போட்டியை முடிக்க போவது போன்றே இருவரும் விளையாடினர்.
ஜெய்ஸ்வாலின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது. சிவம் துபேவும் மிக சிறப்பாக விளையாடினார். சென்னை அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது.
அவரை போன்ற பேட்ஸ்மேன்களை பார்த்து தான் எதிரணிகள் பயப்படும். அவரது ஷாட்கள் அனைத்தும் தனித்துவம் மிக்கதாக இருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட்டை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.