'ஹே..இவருக்கு பெங்காலி புரியிதுப்பா' - வங்கதேச அணியுடன் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த தோனி!
எம்எஸ் தோனி தனக்கு பெங்காலி மொழி தெரியும் என்பதால் வங்கதேச அணியுடன் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கு உலகம் முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வான இவர், 2013ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராஃபி, 2011ம் ஆண்டில் ஒரு நாள் உலகக்கோப்பை, 2007ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை போன்றவற்றை இந்தியாவிற்காக வென்று கொடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்ற இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி தனக்கு பெங்காலி மொழி தெரியும் என்பதால் என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
இவருக்கு பெங்காலி புரிகிறது
அவர் பேசியதாவது “கரக்பூரில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியதால் சுற்றி இருப்பவர்கள் பெங்காலியில் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருமுறை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு பெங்காலி தெரியும் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. எப்படி பந்து வீசவேண்டும் என்று கீப்பர் பெங்காலி மொழியில் பவுலருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அதனால் பவுலர் எப்படி பந்து வீசப்போகிறார் என்று முன்கூட்டியே எனக்குத் தெரிந்துவிட்டது.
போட்டி முடிந்த பிறகு அவர்கள் பேசுவதைக் கண்டு நான் ரியாக்ஷன் கொடுத்தேன். அப்போது அவர்கள் ’ஹே.. இவருக்கு பெங்காலி புரிகிறது’ என்று ஷாக் ஆனார்கள்” என்று தோனி கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.