சைடு வாங்கும் தோனி, டாப் பொசிஷனில் ஜடேஜா; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடக்கும் சுவாரஷ்யங்கள்

MS Dhoni Chennai Super Kings Ravindra Jadeja
By Thahir Jan 17, 2022 05:00 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவருகின்றன.

நடந்து முடிந்த 14வது ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.

நான்காவது முறையாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

40 வயதான தோனி, பதினைந்தாவது ஐபிஎல் சீசனுக்கு முன்னால் ஓய்வு பெற்று விடுவார் என்று பேச்சுகள் நிலவி வந்தன.

அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் பலர் மகேந்திர சிங் தோனி சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில விளையாடும் போது ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு ஏற்றார்போல சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற தோனி பேசுகையில், “இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் விளையாடும் போது தான் தனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்.” என்று மிகவும் மகிழ்ச்சிகரமாக தெரிவித்தார்.

இதை வைத்துப் பார்க்கையில் வரும் ஐபிஎல் சீசன் தோனி கட்டாயம் விளையாடுவார் என தெரிந்துகொண்ட அணி நிர்வாகம், அவரை தக்கவைத்துக் கொண்டது.

அவருடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டனர்.

தோனி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார் என்பதால், அதற்குள் அணியை கட்டமைக்க வேண்டும், அடுத்த கேப்டன் யார் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்? என அணி நிர்வாகம் திட்டங்கள் வகுத்து வந்தது.

தோனியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்றுமொரு மூத்த வீரராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தோனியின் ஒப்புதலும் கிடைத்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே தக்க வைக்கப்படும் போது, தோனி இரண்டாவது வீரராகவே தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிக பணம் செல்ல வேண்டுமென அவர் தாமாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்ததாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

தற்போது ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பும் கொடுக்க இருப்பதால், தொடர்ந்து அவரைச்சுற்றி அணியை கட்டமைக்க தோனி மற்றும் அணி நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.