சென்னையில் கால் பதிக்கவுள்ள தோனியின் பீர் நிறுவனம் - திமுக எம்.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம்?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலீடு செய்துள்ள பீர் நிறுவனம் சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை அணி வீரருமான தோனி 7ink Brews என்ற பீர் நிறுவனம் தயாரிக்கும் Copter7 என்ற பிராண்ட் பெயரில் ஸ்ட்ராங்கான பீர்களுக்கு விளம்பரத் தூதராகவும், பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.
தோனியின் ஹெலிகாப்டன் ஷாட்டை கௌரவிக்கும் வகையில் இதற்கு Copter7 என பெயரிடப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த 7ink Brews நிறுவனத்தின் பீர்கள் ஏற்கெனவே மும்பை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை சென்னையிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி மூலம் சென்னைக்கும், தோனிக்கும் இடையேயான உறவு வலுவாக உள்ளது. தமிழகத்தை தனது இரண்டாவது வீடு என தோனி கூறி வரும் நிலையில் இதன்மூலம் Copter7 சென்னைக்குள் நுழைய முயற்சித்து வருகிறது. இதற்காக அக்கார்ட் குழுமத்துடன் (Accord Group) பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த அக்கார்ட் நிறுவனம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்தால் நடத்தப்பட்டு வருவதாகும். Copter7 நிறுவனத்தின் பீர்களை விற்பனை செய்ய அக்கார்ட் குழுமத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், ஒப்பந்தம் போடப்பட்டால் அக்கார்ட் குழுமத்தின் ஹோட்டல்களில் Copter7 பீர்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.