வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டதே அணியின் வெற்றிக்கு காரணம் - தோனி பெருமிதம்
அணியில் உள்ள வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டதே அணியின் வெற்றிக்கு காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, கொல்கத்தா அணியின் உழைப்பு குறித்து புகழ்ந்துபேசி தனது பேச்சைத் தொடங்கினார்.
அவர் மேலும் பேசியதாவது, ''இம்முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என நினைத்திருந்தேன். முதல் பாதியில் அவர்கள் இருந்த நிலையிலிருந்து தற்போது அவர்கள் அடைந்துள்ள நிலை, மற்ற எந்த அணியாலும் எளிதில் அடைய இயலாதது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வீரர்களை மாற்றினோம். அவர்களை மாற்று வழியில் பயன்படுத்தினோம். அவர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டனர்.
எல்லா இறுதி போட்டிகளும் முக்கியமானது. சென்னை அணியும் நிலைத்தன்மை வாய்ந்த அணி. ஆனால் சென்னை அணியும் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
வெறும் எதிரணியினராக மட்டும் இருந்துவிடாமல் உணர்வுப்பூர்வமான சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
சிஎஸ்கே அதை அறிந்த அணியாக எதிர்காலத்தில் விளங்கும். நாங்கள் குழுவாக அதிகம் விவாதித்தது இல்லை. ஆனால் வீரர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படைத் தன்மையுடன் இருந்தனர்.
அணியினருடன் அறையில் பேசும் நிமிடங்கள் தான் அழுத்தமானது. நல்ல அணியினர் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை.
தனித்தன்மை ஆட்டத்தைக் கொண்ட வீரர்களை சென்னை அணி கொண்டிருந்தது. நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கிறது.
எங்கு விளையாடினாலும், எந்த வித்தியாசமான நிலப்பரப்பில் ஆடினாலும் சேப்பாக்கத்தில் விளையாடுவது போன்ற உணர்வை அது அளிக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி.
அடுத்தமுறை சென்னை ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் விளையாடுவோம் என நம்புகிறேன்'' என்று தோனி பேசினார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
