எம்.எஸ். தோனியால் 2-3 ஓவர்கள் தான் விளையாட முடியும் - இதுதான் காரணம்!
தோனியின் பேட்டிங் வரிசை குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீசனில் சென்னை அணிக்காக 5 முறை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள எம்.எஸ்.தோனி 33 பந்துகளில் 87 ரன்களை விளாசியுள்ளார். மேலும், நேற்றைய ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் வந்த தோனி, 9 பந்துகளில் 2 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 28 ரன்களை விளாசினார். இதனால் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில் "கடந்த சீசனின் போது தோனியின் கால்களில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து தோனி இதுவரை முழுமையாக மீண்டு வரவில்லை. இதன் காரணமாகவே தோனி குறைந்த அளவிலான பந்துகளையே எதிர்கொள்கிறார்.
பெருமை கொள்கிறோம்
ரசிகர்களை போல் நாங்களும் தோனி அதிக நேரம் களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் தோனி களமிறங்கும் நேரம் சரியானது தான். இந்த சீசனில் நிச்சயம் தோனி சிஎஸ்கே அணிக்கு அவசியமான தேவையாக இருக்கிறார்.
கடைசி நேரத்தில் வந்து 2 முதல் 3 ஓவர்களை விளையாட வேண்டிய ரோலில் இருக்கிறார். அந்த இடத்தில் விளையாடுவதற்கு தோனியை விடவும் சிறந்த வீரர் யாரும் கிடையாது. தோனியை மேல் வரிசையில் களமிறக்குவதற்கு பதிலாக, மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்து விளையாட வேண்டும். மற்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ஃபினிஷிங் பொறுப்பை தோனியிடம் கொடுக்கலாம்.
அங்கிருந்து தோனியால் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சீசனில் களமிறங்கும் ஒவ்வொரு முறையும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். தோனி களமிறங்கும் போது மைதானத்தின் சூழலே வேறு மாதிரி மாறிவிடுகிறது. நிச்சயம் தோனியின் சாதனையை நினைத்து அனைவரும் பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.