உன் போதைக்கு நான் ஊறுகாயா? மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்!
நடிகையும் மாடலிங் துறையினை சேர்ந்தவருமான மீராமிதுன் பேச்சு சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் பேசு பொருள் என்றே கூறலாம் நடிகர்கள் சூர்யா தொடங்கி விஜய் வரை அனைவரையும் தவறாக விமர்சித்து இணையாவசிகளின் கோபத்தையும் வெறுப்பினையும் சம்பாதித்தவர் மீராமிதுன்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையை விட்டே வெளியேற வேண்டும் என அவர் பேசினார்.
இந்த வீடியோவால் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்த மீரா மிதுன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மீரா மிதுன் பேச்சுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாகக் கேட்பார்கள். ஆனால், இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரைச் சொல்லிப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார்? சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? என் தெய்வம் கலைஞானி' கமலஹாசன் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானியா? குறிப்பிட்ட சாதியினரைத் திரை உலகை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனத்தைப் புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல... மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.
மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை ஊடகங்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.
மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரைக் கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.