கவுனி நிறம் கருப்பு...மாப்பிள்ளை சம்பா நிறம் சிவப்பு.. தி.மு.க. நிறமும் கருப்பு சிவப்பு : சட்டமன்றத்தின் சிரிப்பலைகள்!

tnassembly mrkpanneerselvam
By Irumporai Aug 19, 2021 05:38 PM GMT
Report

இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குமரி மாவட்டத்தில் மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தரிசு நில மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

மேலும், புதிய வேளாண் திட்டங்களால் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். 5 ஆண்டுகளில் தமிழகத்தை பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என கூறிய அமைச்சர் கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்தோம்.

தமிழக அரசின் இந்த திட்டத்தை பொது மக்கள் பலர் இப்போதும் செயல்படுத்தி வருகிறார்கள். சிறிய வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் சென்று வியாபாரம் செய்வதை பார்க்க முடிவதாக கூறினார்.

மேலும் தற்போது பாரம்பரிய நெல்களை தேர்வு செய்து அந்த அரிசியை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். கருப்பு கவுனி நிறம் கருப்பு, மாப்பிள்ளை சம்பா நிறம் சிவப்பு, தி.மு.க. நிறமும் கருப்பு- சிவப்பு. இவ்வாறு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.

அவர் பேசும் போது பல்வேறு கருத்துகளை கிராமத்து பாணியில் கூறினார். அதை கேட்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சிரித்தபடியே ரசித்தனர்