இனிமேல் பிரச்சனை வேண்டாம்...சமரசத்தில் முடிந்த மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி விவகாரம் !
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ' மிஸ்டர் லோக்கல் ' படத்தின் சம்பள பாக்கி தொடர்பான வழக்கு மத்தியஸ் குழு பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தில் முடிந்துள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் விஜய் டிவி தொலைக்காட்சில் தொகுப்பாளராக இருந்து ,மெரினா திரைப்படத்தில் அறிமுகமாகி எதிர் நீச்சல் ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,டான் என தனது நடிப்பினால் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .தமிழக திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் மனோகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "மிஸ்டர் லோக்கல் ". இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடன் 2018 ஜூன் மாதம் 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு சம்பளமாக ரூ 15 கோடி பெற ஒப்பந்தம் போடப்பட்டது . இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு இதுவரை 11 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாக்கி சம்பளம் ரூ 4 கோடி தரப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது .
நடிகர் சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சமரசத்தில் முடிந்த வழக்கு
இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி என் .கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மத்தியஸ் குழு இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருதரப்பின் சார்பிலும் சமரச மனு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.