கொல்லப்பட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் அதிர்ச்சி
கொல்லப்பட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பெண் 18 மாதங்கள் கழித்து உயிரோடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பெண்
மத்திய பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதானலலிதா பாய்க்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அப்போது லாரி விபத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த வீடியோ வெளியானது.
உடல் அடக்கம்
இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் கையில் இருந்த டாட்டூ மற்றும் காலில் கட்டப்பட்டிருந்த கருப்பு கயிற்றை பார்த்து இது லலிதா தான் என்று அவரது தந்தை காவல்துறையிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
தொடர்ந்து, அந்த பெண்ணிற்கு இறுதிச்சடங்கு செய்து, உடலை அடக்கம் செய்துள்ளனர். இதன் பின்னர், இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, கொலை குற்றஞ்சாட்டின் பேரில், 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீண்டும் வந்த பெண்
இந்நிலையில், 18 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 11 ஆம் தேதி, இறந்ததாக கருதப்பட்ட லலிதா பாய் தனது வீட்டிற்கு வந்தது அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அவரது தந்தை, உடனடியாக அவர் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்த, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இது குறித்து பேசிய லலிதா பாய், "ஷாருக்கான் என்பவருடன் பன்புராவுக்கு விருப்பத்துடன் சென்றதாகவும், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தன்னை ஷாருக் என்ற மற்றொரு நபருக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
அந்த நபருடன் கோட்டாவில் 18 மாதங்கள் வசித்து வந்தேன். சில நாட்களுக்கு முன், அவரிடமிருந்து தப்பி, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் வீட்டிற்கு வந்தேன். தன்னிடம் செல்போன் இல்லாததால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை" என கூறியுள்ளார்.
தற்போது அந்த விபத்தில் இருந்தாக அடக்கம் செய்ய பெண்ணின் உடல் யாருடையது என்றும், இந்த வழக்கில் சிறையில் உள்ள 4 பேர் குறித்தும் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.