முதல்வர் யோகி நீங்கள் காவி அணிவது சரியா? - ஹிஜாப் விவகாரத்தில் சரமாரி கேள்வி
ஹிஜாப் விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி மஜித் மேமன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பியில் துவங்கிய இந்த போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிரொலித்த நிலையில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. இதில் வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தடுத்து நிறுத்தப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான மஜித் மேமன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மதசார்பற்ற இந்தியாவில் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மதத்தை அடையாளப்படுத்தும் காவி உடையை முழுநேரம் அணிந்திருப்பதை எப்படி ஒருவரால் பொறுத்து கொள்ள முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மட்டும் தான் முழு நேரமாக காவி உடை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.