காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு

By Irumporai May 25, 2022 07:35 AM GMT
Report

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதன்பின்,தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது.

சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.  

இந்நிலையில்,விசா முறைகேடு வழக்கு தொடர்பாக எம்பி கார்த்தி சிதம்பரதின்மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனையடுத்து,அவரை நேரில் அழைத்து விசாரிக்க நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இதனிடையே,இன்று மாலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக உள்ள நிலையில் தற்போது அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது.

இதனால்,முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழலில்,டெல்லியில் வீட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தை அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சந்தித்துள்ளார்.