வேலு நாச்சியார்னா யாருன்னு இப்ப உங்களுக்கு தெரியும் - மாஸ் காட்டிய கனிமொழி எம்.பி.
வேலுநாச்சியார் யார் என்றே தெரியவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா மிகவும் பரம்பரியமிக்கதாகும். முப்படைகள் அணிவகுத்து செல்லும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தை, விடுதலை உணர்வை வெளிப்படும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்வது வழக்கம்.
Velu Naachiyar - The first Indian Queen to fight against British#FreedomFighter #TamilLeaders pic.twitter.com/9CW4XtkGcK
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 22, 2022
அந்தந்த மாநிலத்தில் தேச விடுதலைக்காக பாடுபட்ட போராட்ட வீரர்கள் அடங்கியதாக அலங்கார ஊர்திகள் இருக்கும். இதில் சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு பரிசுகளும் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு தமிழக அரசின் அலங்கார ஊர்தி தகுதி சுற்றுக்கு சென்று இருந்தது. 4 வது சுற்று வரை சென்ற நிலையில்குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் தவிர்த்து கேரளா, மேற்கு வங்க உள்ளிட்ட சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ள நிலையில் வீர மங்கை வேலுநாச்சியார், வ உசி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் இவர்கள் யார் என்று தெரியாது என கூறப்பட்டதாக வெளியான தகவல் தான் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேலுநாச்சியார் வரலாறு குறித்த வீடியோ ஒன்றை திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வேலுநாச்சியாரின் சுதந்திர போராட்ட வரலாறு, அவர் இந்திய விடுதலைக்காக அளித்த பங்களிப்பு குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதில் ஹிந்தி வார்த்தைகளுடன் கூடிய சப்-டைட்டில் வருகிறது. அதில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று வீடியோவுக்கு மேலே கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையவாசிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.