இருப்பை காட்டி கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் மீது ஜோதிமணி குற்றம் சாட்டுகிறார் - செந்தில் பாலாஜி தாக்கு..!
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான பூமியில் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று கூறியவர்கள் நாலரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் 1 லட்சம் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
விவசாயத்திற்கு கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வந்த பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு சிலர் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தர்ணா போராட்டம் நடத்தியதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தற்போது பதில் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.