திருவிழாவிற்கு சென்ற எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு - கம்பி வேலியை ஏறிகுதித்து சென்றார்..!
கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி சென்ற காங்கிரஸ் பெண் எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கம்பி வேலியின் மீது ஏறிகுதித்து உள்ளே சென்றார்.
தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.
கரூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கச்சேரி பிள்ளையார் ஆலயத்தின் வழியாக கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றிற்கு கம்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுகிலும், திமுக பிரமுகர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் என்று ஏராளமானோர் வழிநெடுகிலும் விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் போல சென்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே இந்த திருவிழாவிற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர்.
கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கூறினால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் என்று போலீசார் கூறிய நிலையில், பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி அட்டையுடன் காத்திருந்தனர்.
இதுமட்டுமில்லாமல், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொருமைக்கொரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில் கம்பிவேலிகளை தாண்டி குதித்தார். செய்தி சேகரிப்பதற்காக பாஸ் வழங்கப்பட்ட செய்தியாளர்கள் யாரையும், இந்நிகழ்ச்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை.
பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களை திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே புதுமையான ஒரு சம்பவமாக இருந்துள்ளது.
செய்தியாளர்களுக்கும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் அனுமதி மறுத்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.