பிரதமர் மோடி வர்றார்.. ரூ.23 கோடி எடுங்க : மாநில அரசின் தாராள மனசு
மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்கிறார். பிரதமரின் 4 மணி நேர நிகழ்ச்சிக்காக மாநில அரசு ரூ.23 கோடி செலவிடவுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக மத்தியப் பிரதேசம் ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் என்ற தினத்தை கொண்டாடுகிறது. பழங்குடியினருக்கான இந்த விழாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இது நடைபெறும் ஜம்போரி மைதானத்தில் ஐந்து குவிமாடங்கள் கட்டப்படுகின்றன.

நிகழ்வில் பங்கேற்கும் பிரதமர் மோடி போபால் நகரில் நான்கு மணி நேரமும், விழா மேடையில் அதிகபட்சம் 1 மணி நேரம் 15 நிமிடங்களும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரத்தில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் நாட்டின் முதல் அரசு-தனியார் கூட்டாண்மையால் கட்டப்பட்ட ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக மாநில அரசு ரூ.23 கோடி செலவிடுகிறது. இதில் ரூ.13 கோடி ஜம்போரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்துச் செல்ல மட்டுமே செலவிடப்படுகிறது.ஜம்போரி மைதானம் மிகப்பெரிய இடமாகும். எனவே மத்தியப் பிரதேசம் முழுவதிலும் இருந்து இரண்டு லட்சம் பழங்குடியினர் இங்கு அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் அந்த இடம் முழுவதும் பழங்குடியினரின் கலை மற்றும் பழங்குடி புராணங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஒரு வாரமாக 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.