புதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய பாஜக

mp pondicherry
By Irumporai Sep 22, 2021 12:12 PM GMT
Report

புதுச்சேரியில் சட்டப்பேரவையைத் தொடர்ந்து எம்.பி. பதவியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியில் முதல் பாஜக எம்.பி.யாகிறார் செல்வகணபதி. பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுபட்ட புதுவையில் 1963 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது.

தேர்தலில் பலமுறை பாஜக போட்டியிட்டுள்ளது. ஆனால், முதல் முறையாகக் கடந்த 2001-ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். அப்போதுதான் முதல் முறையாக பாஜக சட்டப்பேரவையில் நுழைந்தது.

அதன்பிறகு தேர்தலில் பாஜக வெல்லவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். அப்போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் பாஜக நியமன எம்எல்ஏக்களாக இருந்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 6 இடங்களில் வெற்றி பெற்றது. என்ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஆகிய பதவிகளை பாஜக பெற்றது.

இதுதவிர பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 33 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 9 பேர் உள்ளனர். புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆனால், பலமுறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது.

புதுவை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன்மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்.பி.யாகிறார்.