இலங்கை எம்.பி துப்பாக்கியால் சுட்டு இறக்கவில்லை, அடித்து கொல்லப்பட்டார் - பிரேத பரிசோதனையில் தகவல்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த சில தினங்களுக்கு விலகினார்.
பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்தது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை நோக்கி எம்பி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்த்தாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து மக்கள் அவரின் காரை வழி மறைத்துகொண்டு தாக்க முற்பட்டதால் அருகில் இருந்த கட்டிடத்தில் எம்பி அமரகீர்த்தி நுழைந்ததாகவும் அங்கு தனது கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இறந்த எம்பி அமரக்கீர்த்தியின் பிரதே பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறக்கவில்லை, போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என தெரிய வந்துள்ளது.
போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.