ஜெயின் மத சாந்தாரா சடங்கால் உயிரிழந்த 3 வயது குழந்தை - உலக சாதனை புத்தகத்தால் வெளி வந்த உண்மை
ஜெயின் மத சாந்தாரா சடங்கால் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
3 வயது குழந்தை
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பியூஷ் ஜெயின் மற்றும் வர்ஷா ஜெயின் தம்பதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த தம்பதியின் 3 வயது மகளான வியானா ஜெயினுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சைகள் செய்தும் உடல்நிலை மோசமடைய தொடங்கியதையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள் ஆன்மீக வழியில் தீர்வு தேடத் தொடங்கினர்.
சாந்தாரா சடங்கு
கடந்த மார்ச் 21 ஆம் தேதி அன்று, இந்தூரில் உள்ள ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை சந்தித்துள்ளனர். அப்போது அந்த குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' வழங்கப்பட்டது.
சாந்தாரா என்பது சாகும் வரை உணவு மற்றும் தண்ணீரை துறந்து மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு ஜெயின் மத துறவு சடங்காகும். ஏற்கனவே குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், சாந்தாரா வழங்கப்பட்ட சிறுது நேரத்தில் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
3 வயது குழந்தை வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், "எங்கள் மக்களுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால் குருஜி குழந்தையின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறியதால், குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" தெரிவித்தார்.
உலக சாதனை புத்தகம்
"ஜெயின் மத சடங்கு சந்தாரத்தை சபதம் செய்த உலகின் இளைய நபர்" என்பதற்காக, கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வியானாவின் பெயரை பதிவு செய்த பிறகே இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
பெற்றோரின் மூட நம்பிக்கையால் குழந்தையை கொன்று விட்டதாக நெட்டிசன்கள் பெற்றோரரையும், அந்த மட சடங்கையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
2015ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சாந்தாராவை தற்கொலையாக கருதி சட்டவிரோதம் என அறிவித்திருந்தாலும், ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களையடுத்து, அடுத்த மாதமே உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது.