மலையேறும்போது தவறி விழுந்த இளைஞர் - மலையிடுக்கில் சிக்கி கடந்த 41 மணி நேரத்துக்கும் மேலாக தவிப்பு - பரபரப்பு சம்பவம்
கேரளாவின் குரும்பாச்சி மலையிடுக்கு ஒன்றில் கடந்த 41 மணி நேரத்துக்கும் மேலாக இளைஞர் ஒருவர் சிக்கித் தவித்து வருகிறார். இந்த இளைஞரை பத்திரமாக மீட்க, தமிழகத்திலிருந்தும் பெங்களூரிலிருந்தும் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளது.
கேரளாவின் மலம்புழாவைச் சேர்நத்வர் பாபு (23). இவர் ட்ரெக்கிங் எனப்படும் மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இதனால், கடந்த திங்கள் கிழமை அன்று பாபுவும், அவரது 3 நண்பர்களும் கேரளாவின் குரும்பாச்சி மலைக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது, மலையேற்றத்தின்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு, உருண்டு விழுந்திருக்கிறார். கீழே தவறி விழுந்த அவர், மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார்.
இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பாபு உருண்டு கீழே விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தெரியவில்லை.
இதனால், நண்பர்கள் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளனர். அப்போது, பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து உடனடியாக அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், அவரை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை.
மலையிடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியின் மீட்புக்குழு ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்துள்ளது. இடுகான பகுதி என்பதால், பாபுவுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அளிப்பதே மிகவும் சிரமமாகி உள்ளது. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார் அந்த இளைஞர்.
இது குறித்து செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாபுவை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடி இருக்கிறார். இதனையடுத்து, பெங்களூருவிலிருந்து ஒரு பிரிவினரும், தமிழகத்தின் வெலிங்டனிலிருந்து ஒரு பிரிவினரும் குரும்பாச்சி மலைக்கு புறப்பட்டிருக்கிறார்கள்.