தன்னம்பிக்கை கதை..! நடுக்கடலில் தனிமை; உயிர்ப் போராட்டம் - திக் திக் 28 மணி நேரம்!
பிரெட் ஆர்ச்சிபால்ட்
கடந்த 2013ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரெட் ஆர்ச்சிபால்ட் என்பவர் சர்ஃபிங் விளையாடுவதற்காக தன் 8 நண்பர்களோடு இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார். இவர் தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைப்பிரிவில், பீரங்கிப் படைத் தலைவராக இருந்தவர் ஒய்வு பெற்றவர் ஆவார்.
இரண்டு நாள்கள் பயணத்துக்குப் பிறகு, இந்தோனேசியா சென்றடைந்த அவர்கள் நாகா லாட் (Naga Laut) என்ற பிரமாண்டமான படகில் ஏறி நூற்றுக்கணக்கான குட்டித்தீவுகள் உள்ள மென்டாவாய் (Mentawai) என்கிற இடத்திற்கு போய் சர்ஃபிங் விளையாடுவதற்கு புறப்பட்டனர். இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து மேற்கே 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவர்கள் பாகில் சென்று கொண்டிருக்கும்போது கடற்காற்று ஒத்துக்கொள்ளாததால், ஆர்ச்சிபால்ட் உட்பட 6 பேர் வயிற்றுவலி, வாந்தி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். இரவு 2 மணியளவில் படகின் மேற்தளத்தில் நின்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்த ஆர்ச்சிபால்ட் நிலை தடுமாறி, படகிலிருந்து கடலில் விழுந்துள்ளார். கடலில் விழுந்த அவரால் "ஏய்... நில்லுங்க.. நில்லுங்க" என்று எவ்வளவு சத்தம் போட்டும் அதை நிறுத்த முடியவில்லை.
மேலும், படகில் இருந்த அவருடைய நண்பர்கள் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவர்களும் இது தெரியவில்லை. நள்ளிரவு. இருட்டு. சுற்றிலும் கடல் தண்ணீர், ஆர்ச்சிபால்ட் டி-ஷர்ட் அணிந்திருந்ததால் உடல் கொஞ்ச நேரத்தில் ஜில்லிட்டுப் போய்விடும் போலிருந்தது. அவர் இந்தியப் பெருங்கடல். கரையை நெருங்க வேண்டுமென்றால் 100 கிலோமீட்டர் தூரமாவது நீந்த வேண்டியிருந்தது. என்ன செய்வதென்று யோசித்த ஆர்ச்சிபால்ட் யாராவது பார்ப்பார்கள், உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் கையைக் காலை அசைத்து, தலையை நீட்டிக்கொண்டே இருந்தார். ஆர்ச்சிபால்ட் கடலில் விழுந்து 4 மணி நேரத்துக்கு பிறகு, படகில் அவர் இல்லை என்பது நண்பர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, படகின் கேப்டன் உடனே படகைத் திருப்ப உத்தரவிட்டார். இந்தோனேசிய கடலோரக் காவல் படைக்கும், தன் மேலதிகாரிகளுக்கும் ஆர்ச்சிபால்ட் காணாமல்போன தகவலைத் தெரிவித்தார். அவர்கள் தேடுதல் வேட்டை தொடங்கினர்.
வெற்றிக்கதை
அங்கு ஆர்ச்சிபால்ட் இருக்கும் இடத்தில் லேசான புயல் ஏற்பட்டு கடல் கொந்தளிக்க தொடங்கியது. அவர் தலையை நீருக்கு மேல் நீட்டிக்கொண்டு, இலக்கில்லாமல் கைகளை அசைத்து அசைத்து நீந்திக்கொண்டிருந்தார். மேலும் அவருக்கு அவ்வப்போது அவருக்கு வாந்தி வந்துகொண்டிருந்தது.
இடையில் மழை பெய்யத்தொடங்கியதால், தாகத்தை தணிக்க மழை நீரை லேசாக குடித்துள்ளார். அப்போது அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளின் வீட்டு நினைவு வந்தது. உடனே, நீச்சலடி... முடிஞ்சவரைக்கும் நீந்து...’ என்றபடி கடலில் முன்னேற ஆரம்பித்தார். அவரை ஜெல்லி மீன்கள் கடித்தன. அவர் அயர்ந்திருந்தபோது, எங்கிருந்தோ வந்த இரண்டு சீகல் பறவைகள் அவர் தலையைத் தட்டிவிட்டுப் பறந்தன. இந்நிலையில் ஆர்ச்சிபால்ட் கடலில் விழுந்து 12 மணி நேரத்துக்குப் பிறகு தூரத்தில் அவர் பயணித்த நாகா லாட் படகு வந்தது. உடனே கையை உயர்த்தி சத்தம் போட்டார். இருந்தும் அவர் கொடுத்த குரல் அவருக்கே கேட்கவில்லை. அந்த கப்பல் அவரை விட்டுவிட்டுப் போனது. திடீரென்று ஒரு சுறா மீன் அவருக்குப் பின்னால் வந்து நின்றது. ஆனால் அது அவரை தாக்கவில்லை.
ஒருவழியாக, 28 மணி நேரம் கடந்து பேரன்ஜோய் (Barrenjoey) என்ற படகு அவரை மீட்க வந்தது. அந்தப் படகிலிருந்த கேப்டன் எல்தரிங்டன் (Eltherington), அவர் கையைப் பிடித்துத் தூக்கி, "ஒருவழியாக உன்னைப் பிடிச்சுட்டோம் நண்பா’’ என்றார். இறுதியாக ஆர்ச்சிபால்ட் மீட்கப்பட்டார். படகில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் "ஓகே... ஒரு பிரச்னையும் இல்லை’’ என்றார்கள். அந்த 28 மணி நேரத்தில் ஆர்ச்சிபால்ட் 15 பவுண்ட் எடை குறைந்திருந்தார். சூரிய வெப்பம் அவரைக் கொஞ்சம் தோலைப் பதம் பார்த்திருந்து.அவருடைய ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. தன்னந்தனியே 28 மணி நேரம் ஆர்ச்சிபால்ட் கடலில் தாக்குப்பிடித்ததற்கு காரணம், அவரின் தன்னம்பிக்கையும், மனோதிடமும் தான். இந்த வலிமிகுந்த தனது அனுபவத்தை `Alone: Lost Overboard in the Indian Ocean’ என்ற நூலாக எழுதி கிண்டிலில் வெளியிட்டிருக்கிறார் ஆர்ச்சிபால்ட்.