2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய் - கடைசியில் நடந்த விபரீதம்
தஞ்சாவூர் அருகே தனது இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா என்பவரின் கணவர் விஜயகுமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகன்களான நிதிஷ், முகேஷ் உடன் வசித்து வந்தார்.
ஆனால் கணவன் இறந்த துக்கத்தில் இருந்து சத்யா சாக முடிவெடுத்தார். அதேசமயம் தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என்ற நிலையில் அவர்களையும் தன்னோடு அழைத்து செல்ல மனதை கல்லாக்கி கொண்டு முடிவெடுத்துள்ளார். அதன்படி விஷமருந்தை வாங்கி முதலில் தனது மகன்கள் முகேஷூக்கும், நிதிஷூக்கும் கொடுத்துள்ளார்.
பின்னர் விஷத்தை தான் குடிக்க முயற்சித்த போது எதேச்சையாக அங்கு வந்த உறவினர் ரெங்கசாமி விஷத்தை தட்டிவிட்டார். உடனடியாக தாய் மற்றும் மகன்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் நிதிஷ் மற்றும் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் சத்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து, அதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.