”என் மகளைக் காப்பாற்றுங்கள்” - உக்ரைனில் படிக்கும் மாணவியின் தாய் மனு
உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற மகளை மீட்டுக்கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தாய் மனு அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த விமலா தேவி என்பவரது மகள் நந்தினி என்பவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யா -உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் தங்கி மருத்துவம் படித்து வரும் தனது மகளை மீட்டு தரக்கோரி தாய் விமலாதேவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில் தனது மகள் நந்தினி உக்ரைன் நாட்டில் மருத்துவம் முதலாம் ஆண்டு பயின்று வருவதாகவும்,
தற்போது ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரினால் எனது மகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் அதிக அளவிலான வெடி குண்டு சத்தங்கள் கேட்டதாகவும்
நாங்கள் தற்போது சுரங்கப் பகுதியில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தொடர்ந்து இந்த பகுதியில் தஞ்சம் அடைந்து இருக்க முடியாது என்றும் தனது மகள் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.
உக்ரைன் நாட்டில் உணவு மற்றும் இடமின்றி தவிக்கும் தனது மகளை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அவசரகால உதவி எண் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.