தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய 12 வயது சிறுவன் கோரிக்கை
குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நிலையில், இவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இவரது தீர்ப்பினை உறுதி செய்த நிலையில், இவருக்கு மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு ,இந்தியாவில் தூக்கு தண்டனை பெற்ற முதல் பெண்மணி இவர்தான் என கூறப்பட்ட நிலையில்,ஷப்னமின் மகன் முஹம்மது தாஜ், தனது தாயாருக்கு வழங்கப்பட்டுள தூக்கு தண்டனை தீர்ப்பை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சிறிய பலகையில் எழுதி தனது தாயாரின் மரணதண்டனையினை ரத்து செய்ய வேண்டுமென கூறியுள்ளார். தனது தாயாரை தான் மிகவும் நேசிப்பதாக ஜனாதிபதிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஷப்னமும் தனது மரண தண்டனையை குறைக்க வேண்டுமென உத்திரப்பிரதேச மாநில கவர்னருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.