ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை; தவிக்கும் 5 பெண் குழந்தைகள் - சிக்கிய கடிதம்
5 குழந்தைகளின் தாய் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை பறிப்பு
திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (38). கோவையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானமின்றி குழந்தைகளை வளர்க்க தவித்துள்ளார்.
அதனால், வேலை கேட்டு மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன் படி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளர் வேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக வேலை செய்து வந்தார்.
தாய் தற்கொலை
திடீரென ஊராட்சி உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் அவரை வேலை செய்யவிடாமல் தடுத்து இனி வேலை இல்லை என அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் அரசுப்பேருந்தில் 2 குழந்தைகளுடன் ஏறி அருகிலுள்ள பயணியிடம் ஒப்படைத்துவிட்டு பேருந்தில் இருந்து குதித்துள்ளார்.
உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கடிதம் ஒன்று சிக்கியது. அதில், வேலை கேட்டது தவறா? எனது தற்கொலைக்கு முக்கியக் காரணம் ஊராட்சி உறுப்பினர்கள், எழுத்தர் ஆகியோர்தான். அவர்கள் என்னை அசிங்கமாகப் பேசி, அடிக்க கையை ஓங்கினர்.
அவர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டும். புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்காததோடு அங்கு பணியில் இருந்த போலீஸார் ‘ஏன் அவர்கள் மீது புகார் அளிக்கிறாய்’ என தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டி தற்கொலைக்குத் தூண்டினர் என குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.