கடன் பிரச்சினையால் தாயை துடிக்க, துடிக்க அடித்துக் கொன்ற கொடூர மகன் - அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், ஈச்சம்பட்டைச் சேர்ந்தவர் சின்னதாயி. இவரது மகன் வனராஜ் (36). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சின்னதாயி காசு இல்லாததால், கை செலவிற்காக பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடன் வாங்கிய சின்னதாயி திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால், கடன் கொடுத்தவர்கள் மகன் வனராஜிடம், சின்னதாயி வாங்கிய பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் சின்னதாயிடம் வனராஜ் இது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது, சின்னதாய்க்கும், வனராஜூக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வனராஜ் சின்னதாயியை உருக்கட்டையால் பயங்கரமாக தாக்கினார். ரத்தம் சொட்ட சொட்ட சின்னதாயி மயங்கி கீழே சரிந்தார். சின்னதாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது, சின்னதாயி மயங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, சின்னதாயியை அவரது உறவினர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சின்னதாய் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, வனராஜ் யாருக்கும் சொல்லாமல் சின்னதாயியை அடக்கம் செய்ய முயற்சி செய்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சின்னதாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வனராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.