24 வருடங்களுக்கு முன் உயிரிழந்த கணவர் - மீன் கழுவி மகளை டாக்டராக்கிய தாய் - வாழ்த்து கூறிய தமிழக முதலமைச்சர்

M K Stalin
By Nandhini May 30, 2022 01:24 PM GMT
Report

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணி.

இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24 ஆண்டுகளுக்கு முன்பு ரமணியின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீனை கழுவி சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, 2, 3 ரூபாய் வாங்கிய ரமணி தற்போது, 50 ரூபாய் வரை பணம் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

ஒரே மகளான விஜயலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார் ரமணி. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்துள்ளார்.

தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகாரம் தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக தீவிர பயின்று வருகிறார். இதனால் நாள்தோறும் 8 மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் வேலையை செய்து வருகிறார் ரமணி.

இது குறித்து ரமணி கூறுகையில், கடவுளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், எனது 2 கைகளை மட்டும் விட்டுவிடு. கைகள் இருந்தால் இன்னும் நாள் முழுக்க பல கஷ்டங்கள் பட்டாலும், என் பிள்ளையை காப்பாற்றி, என் மகளை மருத்துவராக ஒரு இடத்தில் அமர வைத்து விடுவேன் என்று கண்ணீருடன் கூறினார்.  

இந்நிலையில், பெண்களின் உயர்கல்வியில் தமிழகம் அடைந்துள்ள உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல, மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்புடன் நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை என்று விஜயலட்சுமிக்கும், தாய் ரமணிக்கும் தமிழக முதலமைச்சர் வாழ்த்து கூறினார்.