திருமணம் தாண்டிய உறவு - தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்!
கள்ளக்காதலுக்காக தாய் தன் 4 வயது பெண் குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு அபர்ணா ஶ்ரீ (4) என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழரசி ரகுபதியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
தாய் வெறிச்செயல்
இந்நிலையில் குழந்தை திடீரென வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்ததாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில், தமிழரசிக்கு அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் (33) என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி தமிழரசியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதற்கு குழந்தை தொந்தரவாக இருப்பதாக கூறி, தமிழரசி தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.