ஆசை ஆசையாய் வளர்த்த மகனை கொன்றது ஏன்? தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகத்தில் பெற்ற மகனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த தாயால் பரபரப்பானது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, இவரது கணவர் புகழேந்தி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி, பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு புகழேந்தி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார் ராஜேஸ்வரி, இவரது இரண்டாவது மகன் சிவக்குமார்.
இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர், இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் சிவக்குமார் ஊர்சுற்றி திரிந்ததாக தெரிகிறது.
அத்துடன் மணல் கடத்தல் உட்பட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் சிவக்குமார் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு வரும் சிவக்குமார், தாய், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் சிவக்குமாரின் கொடுமைகள் தாங்க முடியாமல் அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் திண்ணையில் படுத்திருந்த சிவக்குமார் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் பேசிக்கொள்ள, தகவலறிந்து வந்த ஆம்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாக தெரிகிறது.
அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், தன் மகனை கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தன் மகனால் யாருக்கும் நிம்மதியில்லை, மருமகள், பேரப்பிள்ளைகள் கஷ்டப்படுவதால் தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ராஜேஸ்வரியை கைது செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.