குழந்தைகளை மீட்க கிணற்றில் குதித்த தாய் - அடுத்ததாக அரங்கேறிய சோக சம்பவம்

ranipetkids fellinwell motherjumpsinwell kidsdead motherrescued
By Swetha Subash Feb 10, 2022 08:37 AM GMT
Report

தவறிவிழுந்த குழந்தைகளை மீட்க கிணற்றில் குதித்த தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா(32).

இவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சோளிங்கர் அடுத்த அய்யனேரி கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் முரளி என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர்.

முரளிக்கும் ரேகாவுக்கும் 12 வயதில் கோமதி மற்றும் 8 வயதில் ஜீவிதா ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரேகா அவரின் அண்ணன் ஏழுமலை வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்காக நேற்று குடும்பத்துடன் கன்னிகாபுரம் கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டின் அருகாமையில் இருந்த விவசாய கிணற்றில் ரேகா மற்றும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் இன்று காலை 8 மணி அளவில் துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து கிணற்றில் தவறி விழுந்ததுள்ளனர்.

அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தாய் ரேகாவும் கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்க முயற்சி செய்தனர் ஆனால் தாய் ரேகாவை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்ததுள்ளது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகளை மீட்க ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் காவேரிபாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் 2 குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட குழந்தைகள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தில் நடைபெறும் விசேஷ நிகழ்வுக்கு வருகை தந்து இரண்டு குழந்தைகள் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் கன்னிகாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.