ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மகன்: துக்கம் தாளாமல் இறந்த தாய்
புதுச்சேரியில் மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியைக் கேட்டு தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்த வேலு- முத்துலட்சுமி தம்பதியினருக்கு 27 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஜீவா மட்டும் தனியாக ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.
அந்த இடம் சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டுள்ளதை அறியாத அவர் ஆழமான பகுதிக்குச் சென்றதால் ஆற்றில் மூழ்கியுள்ளார் இதைப்பார்த்த ஜீவாவின் நண்பர்கள் உடனடியாக தவளைக்குப்பம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஜீவாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜீவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் இதய நோய் உள்ள ஜீவாவின் தாயார் முத்துலட்சுமி மகன் ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முத்துலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை ஜீவாவின் உடல் அரியாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது.அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
அதேசமயம் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜீவாவின் தாயார் முத்துலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.