துரத்திய கொரோனா பயம் - 3 ஆண்டுகளாக வீட்டிற்குள் மகனுடன் வாழ்ந்து வந்த பெண்

COVID-19 India
By Thahir Feb 22, 2023 08:45 PM GMT
Report

கொரோனா பயத்தால் தனது 10 வயது மகனுடன் மூன்று ஆண்டுகளாக வீட்டை பூட்டி வசித்து வந்த இளம் பெண் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகள் வீட்டை திறக்காத பெண்

இந்தியாவில் 2020 ஜனவரி மாதம் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதன் காரணமாக மக்கள் கொத்து கொத்தாக செத்து விழ ஆரம்பித்தனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது.இதன் பின் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பயம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் வீட்டைப்பூட்டி இளம்பெண் ஒருவர் சிறை வாழ்வு வாழ்ந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

mother-child-one-room-for-over-year-fearing-covid

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள சர்க்கர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் சுஜன் மாஜி. இவரது மனைவி முன்முன்(33). இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னும், கொரோனா அச்சத்தால் முன்முன் தனது 10 வயது மகனுடன் வீட்டைப்பூட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

கணவனை வாடகை வீட்டில் குடியேற வைத்த கொடுமை 

செல்போனில் வீடியோ அழைப்பில் கணவனுடன் பேசி வந்த முன்முன், கணவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் தனது சொந்த வீட்டின் அருகில் வாடகை வீட்டில் சுஜன் மாஜி வசித்து வந்தார்.

அத்துடன் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வீட்டு வாசலில் வைத்துள்ளார். அதை அவரது மனைவி ஆள் இல்லாத போது எடுத்துக் கொள்வார். அடிக்கடி கியாஸ் சிலிண்டர் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இன்டக்சன் அடுப்பை வாங்கச் சொல்லி சுஜன் மாஜியிடம் அவரது மனைவி முன்முன் வலியுறுத்தினார்.

அதன்படி அந்த அடுப்பை அவரது கணவர் வாங்கித் தந்துள்ளார். கொரோனா அச்சத்தில் இருந்து உலக மக்கள் விடுபட்டதை தனது மனைவிக்கு சுஜன் மாஜி எத்தனையோ முறை செல்போனில் எடுத்துச் சொல்லியும், 'கொரோனா தாக்கிடும், நீங்கள் வீட்டிற்கு வரவேண்டாம்' என அவரது மனைவி பிடிவாதம் பிடித்துள்ளார்.

கதவை உடைத்து தாய் மற்றும் மகனை மீட்ட அதிகாரிகள் 

10 வயது மகனுடன் வீட்டை உள்ளே பூட்டி மனைவி தனிமையில் வாழ்ந்து வந்ததால், சுஜன் மாஜிக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், சுகாதாரத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகளிடம் அவர் முறையிட்டார்.

இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து தாய், மகனை நேற்று போலீஸார் மீட்டனர். மூன்று ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வசித்து வந்ததால் அவர்கள் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சக்கர்பூர் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் கூறினார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சத்தில் மூன்று ஆண்டுகளாக பூட்டிய வீட்டிற்குள் மகனுடன், தாய் வசித்து வந்த சம்பவம் குருகிராம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.