30 லட்சம் நாய்களை கொல்ல திட்டம் - விளையாட்டு போட்டிக்காக அரசு செய்யும் கொடூரம்
30 லட்சம் தெரு நாய்களை கொலை செய்ய மொராக்கோ அரசு திட்டமிட்டுள்ளது.
மொராக்கோ
மொராக்கோ(morocco) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். வரும் 2030 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து FIFA கால்பந்து உலககோப்பை நடத்தும் வாய்ப்பை மொராக்கோ பெற்றுள்ளது.
கால்பந்து போட்டிக்கு உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 2030 FIFA உலகக் கோப்பை போட்டியின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
FIFA கால்பந்து
மைதானங்களை மேம்படுத்துவது, போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, வீரர்களுக்கான தங்குமிடம் என போட்டியை சிறந்த முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மெராக்கோ அரசு இப்போதே தொடங்கி விட்டது.
ஆனால் FIFA உலகக் கோப்பையை காரணம் காட்டி மொராக்கோ அரசு செய்யும் மற்றொரு செயல் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நகரங்களை தூய்மை படுத்துவதாக கூறி 30 லட்சம் தெரு நாய்களை கொல்ல உத்தரவிட்டுள்ளது.
30 லட்சம் நாய்கள்
இதற்காக அதிக விஷமுள்ள ஸ்டிரைக்னைன் ஊசி மூலம் நாய்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இடங்களில் நாய்களை சுட்டும், மின்சாரம் பாய்ச்சியும் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொரோக்காவில் நாய்களை கொல்ல தடை இருந்தாலும் FIFA போட்டிக்காக இந்த தடை உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மொராக்கோ அரசின் இந்த செயல் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த மனிதாபிமான முறையில் பல வழிகள் இருந்தாலும் மொராக்கோ அரசு கொடூரமாக நடந்து கொள்கிறது. FIFA அமைப்பு இதை கண்டிக்க வேண்டும் என விலங்கு நல அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.