ரயில்கள் மோதி விபத்து - 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள பேருந்துகளிலும் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர்.
வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரெயில் விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.