நிலவில் இத்தனை பள்ளங்களா? - வீடியோ எடுத்த சந்திராயன்3 விண்கலம்..!

Indian Space Research Organisation
By Thahir Aug 08, 2023 06:30 AM GMT
Report

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற சந்திராயன் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய முதல் வீடியோ காட்சிகளை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நிலவில் வட்டமடிக்கும் சந்திராயன் 3

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமார் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம்3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

Moon video taken by Chandrayaan 3

அதை தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் படி, சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு 5வது முறையாக அதிகரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 236 கிமீ தொலைவும், அதிகபட்சம் 1,27,609 கிமீ தொலைவும் கொண்ட பாதையில் விண்கலம் பயணித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் -1 ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணியளவில் விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலகி, நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.

வீடியோ அனுப்பிய சந்திராயன் 3

இதையடுத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி உந்து கலனில் இருந்து லேண்டர் கலன் விடுவிக்கப்படும். பின்னர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் லேண்டர் கலன் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும்.

அதன் பின்னர் அதிலிருந்து ரோவர் கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்த உள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு இதுவரை எந்த நாடும் செல்லாத சிக்கலான 41 நாள் பயணத்திற்காக ஏவப்பட்ட 22 நாட்களுக்கு பிறகு சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெறற்றிகரமாக நுழைந்த சந்திராயன் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பியதை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Moon video taken by Chandrayaan 3