காங்கிரஸ் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் - நாடாளுமன்றத்தில் பரபரப்பு
காங்கிரஸ் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நவம்பர் 25ம் தேதி முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
அதானி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க கோரி முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுக்கட்டாக பணம்
இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை உறுப்பினர்கள் மத்தியில் வெளியிட்டார்.
அதில், "நேற்று அவை கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் நடைபெற்றது. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் கட்டுக்கட்டான பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.
அபிஷேக் மனு சிங்வி
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அபிஷேக் மனு சிங்வி, "இது போன்ற ஒரு விஷயத்தை முதல் முறையாக கேள்விப்படுகிறேன். நாடாளுமன்ற கேண்டினில் பயன்படுத்துவதற்காக எப்போதும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் செல்வேன்.
Heard of it first time now. Never heard of it till now! I carry one 500 rs note when I go to RS. First time heard of it. I reached inside house at 1257 pm yday and house rose at 1 pm; then I sat in canteen till 130 pm with Sh Ayodhya Rami Reddy then I left parl!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) December 6, 2024
சம்பவம் நடந்த அன்று கூட மதியம் 1:30 மணி வரை நாடாளுமன்ற கேன்டினில் தான் இருந்தேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்பட்டது எம்பிக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ் சார்பில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.