சசிகலா ஆதரவாளர்களிடம் பணம் பறித்த திருடர்கள் - மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்களிடம் திருடர்கள் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். முன்னதாக மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்ததை தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டது.
இதனிடையே மெரினாவுக்கு சசிகலா வருவதை அறிந்த தொண்டர்கள் காலை முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியிலும், சசிகலாவின் திநகர் வீட்டின் முன்பு அதிமுக கொடிகளுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்களிடம் திருடர்கள் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக பணம், செல்போனை பறிகொடுத்த 20 பேர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, 20 பேரிடம் ரூ.93,000 பணம், 5 செல்போன்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.