திருமண மோசடி வழக்கில் மீண்டும் சிக்கும் ஆர்யா - சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி வாழ் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் ரூ.70 லட்சம் வரை பண மோசடி செய்துவிட்டதாகவும் குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை ஆகஸ்ட் 24 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை வியாழக்கிழமை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளி தான் என்றும், எஃப்ஐஆரில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயர் இடம் பெற்றபோதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்னும் கைது செய்யாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.